தமிழில் மீண்டும் நடிக்க வந்த ஹரிப்பிரியா
|ஹரிப்பிரியா, 5 வருடங்களுக்கு பிறகு சசிகுமார் ஜோடியாக நான் மிருகமாய் மாற என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் பட உலகுக்கு வந்துள்ளார்.
தமிழில் 2010-ல் வெளியான, 'கனகவேல் காக்க' படத்தின் மூலம் அறிமுகமான ஹரிப்ரியா தொடர்ந்து 'வல்லக்கோட்டை', 'முரண்', 'வாராயோ வெண்ணிலாவே' ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் 5 வருடங்களுக்கு பிறகு சசிகுமார் ஜோடியாக நான் மிருகமாய் மாற என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் பட உலகுக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து ஹரிப்பிரியா அளித்துள்ள பேட்டியில் ''எனது நடனத்தை பார்த்து 16 வயதில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். அப்போது முதல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறேன். இது எனது அதிர்ஷ்டம். இத்தனை வருடங்களில் கமர்ஷியல் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள நிறைய படங்களில் நடித்து விட்டேன். இன்னும் 10 வருடங்கள் கதாநாயகியாக தொடர்ந்து நடிப்பேன். நான் மிருகமாய் மாற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் கன்னடத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். சசிகுமார் நடிகர் மட்டுமல்ல ஒரு இயக்குனரும் கூட. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்றார்.