ஐதராபாத்தில் நடந்தது: நடிகை லாவண்யா திருமண நிச்சயதார்த்தம்
|சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், லாவண்யா திரிபாதி. இவரும், தெலுங்கு நடிகர் வருண் தேஜூம் காதலித்து வந்தனர். இருவரும் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது காதல் மலர்ந்தது.
வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. வருண் தேஜின் தந்தையும், நடிகருமான நாகபாபு, "திருமண விஷயத்தை வருண் தேஜே அறிவிப்பார். திருமணம் முடிந்ததும் மணமக்கள் தனி குடித்தனம் சென்றுவிடுவார்கள்", என்று கூறியிருந்தார்.
யாரும் எதிர்பாராத வகையில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம் சத்தமே இல்லாமல் நேற்று நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய குடும்பத்தினரும் மட்டுமே பங்கேற்றனர்.
நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இத்தகவல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.