புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்ட படப்பிடிப்பு... எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விடுதலை 2ம் பாகம்...!
|விடுதலை 2ம் பாகத்தில் நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விடுதலை பாகம் 1'. இந்த படம் கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்.
இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் இடம்பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தது. நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் இடம்பெறும் பிளாஷ் பேக் காட்சிகளில் டீ-ஏஜிங் (De-Ageing) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் சில சண்டை காட்சிகள் வனப்பகுதியில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.