போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெற்றிமாறன்
|நம்முடைய வாழ்க்கை நம்ம கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். எதையுமே நம்மை கட்டுப்பாடு செய்ய அனுமதிக்ககூடாது என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.
இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை பண்பாட்டு ஆய்வகமும், வேல்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு இலவச கல்வி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த வெற்றிமாறனும் ஐசரி கணேசும் அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது வெற்றிமாறனிடம் இளைஞர் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நம்முடைய வாழ்க்கை நம்ம கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். எதையுமே நம்மை கட்டுப்பாடு செய்ய அனுமதிக்ககூடாது. எனக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. அதை நான் நிறுத்திவிட்டேன். எந்த விதமான அடிமையாக்குதலும் நல்லது கிடையாது. அப்படி ஒரு பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தால் அதைக் கடந்து வருவதற்கான முயற்சிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் உரையாடலை தொடங்க வேண்டும், பெற்றோரும் பேசுவதுடன் இல்லாமல் அவர்கள் எந்த வித பழக்கத்திற்கும் அடிமையாக இருக்க கூடாது. மேலும் போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரும் காலத்தில் ஒரு படம் இயக்கவுள்ளேன். விடுதலை 2 ஷூட்டிங், இன்னும் 20 நாளில் முடிவடைகிறது" என்றார்.