'குட் நைட்' பட டைரக்டருக்கு திருமணம்
|‘குட் நைட்’ படத்தை இயக்கி புகழ் பெற்ற விநாயக் சந்திரசேகரனுக்கு திருமணம் நடைப்பெற்றிருக்கிறது.
சென்னை,
'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'குட் நைட்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்திருந்தனர்.
ஐடி இளைஞரின் குறட்டை பிரச்சனையால் அவரது வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களை மையமாக வைத்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கும் பிரியா என்ற மணப்பெண்ணுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. விநாயக் சந்திரசேகரனின் திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.