நயன்தாரா நடித்த காட்பாதர் படம் ரூ.125 கோடி வசூல்
|நயன்தாரா நடிக்க காட்பாதர் படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூ125 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான லூசிபர் படம் தெலுங்கில் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்க காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சல்மான் கான், பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரூ.100 கோடி செலவில் தயாரானது. ஆனால் படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூ125 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் நயன்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "காட்பாதர் படத்தை பெரிய வெற்றிப்படமாக்கிய திரைப்பட ஆர்வலர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. திரையரங்கில் அனைவரும் எங்கள் படத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. காட்பாதர் எனக்கு முக்கிய படம், சிரஞ்சீவியுடன் மீண்டும் இந்த படத்தில் நடித்து இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். படப்பிடிப்பில் அவரோடு நடித்த ஒவ்வொரு நொடியும் என்னை மெருகேற்றி கொண்டேன். இந்தப் படத்தில் நான் நடித்த சிக்கலான கதாபாத்திரத்துக்கு இயக்குனர் மோகன்ராஜா என்மீது வைத்த நம்பிக்கையால்தான் உயிர் கொடுக்க முடிந்தது. எல்லோருக்கும் பிடித்த சல்மான்கான் நடித்ததும் படத்துக்கு பலமாக அமைந்தது" என்று கூறியுள்ளார்.