< Back
சினிமா செய்திகள்
கோட் படம் மூன்று மணி நேரம் ஏன்? வெங்கட் பிரபு விளக்கம்!
சினிமா செய்திகள்

கோட் படம் மூன்று மணி நேரம் ஏன்? வெங்கட் பிரபு விளக்கம்!

தினத்தந்தி
|
30 Aug 2024 9:21 PM IST

இனிமேல் விஜய் நடிக்க போவதில்லை என்பதால் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்குமென்று இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

விஜய் நடிப்பில் விரைவில் 'கோட்' படம் வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆகவிருப்பதால், தற்போது புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் 'கோட்' படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கோட்' வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் தணிக்கை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி 'கோட்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 'கோட்' படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என்றும், ஏழு இடங்களில் படத்திற்கு சென்சாரில் கட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் தீயாய் தகவல்கள் பரவி வருகின்றன. படத்தின் இறுதியில் படக்குழுவினர் ப்ளூபெர்ஸ் வீடியோ அல்லது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகளாக இருக்கும் என நெட்டிசன்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருந்தனர். தொடர்ந்து, கோட் திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த 17 ம் தேதி வெளியானது. தொடர்ந்து, இந்த டிரெயிலர் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்தது.

கோட் திரைப்படம் 3 மணி நேரம் என தகவல் வெளியாகிய நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணலில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து வெங்கட் பிரபு பேசியதாவது, "முதலில் 3 மணி நேரம் படம் என்பது எங்களுக்குமே சிறிது பயமாக இருந்தது. ஆனால் சில படங்களின் கதையை கூறுவதற்கு அவ்வளவு நேரம் செலவிட்டே ஆகவேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும். அதிகமான சுவாரசியத்துக்காக எல்லாவற்றையும் கட்செய்துவிட்டு தரமுடியாது. 3 மணி நேரமாக இருந்தாலும் படம் சுவாரசியமாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. இதை குறிப்பாக வைக்க டிரெய்லரிலேயே 3 நிமிடங்கள் வைக்க திட்டமிட்டோம். ஆனால் கதை அதிகமாக சொல்லிவிடுகிற மாதிரி இருப்பதால் 2.40 நிமிடங்களாக குறைத்தோம். இனிமேல் விஜய் நடிக்க போவதில்லை என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்குமென நினைத்து அதை அப்படியே வைத்துள்ளோம்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்