சூர்யாவின் கஜினி 2-ம் பாகம்
|கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் அதிகம் வந்துள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் வந்தது. விக்ரமின் சாமி, அஜித்குமாரின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம், சுந்தர்.சியின் அரண்மனை 3 பாகங்கள் வந்தன. இந்தியன் 2-ம் பாகத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யா நடித்த கஜினி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாரான கஜினி படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் நயன்தாரா, அசின் கதாநாயகிகளாக நடித்து இருந்தனர். இந்தியிலும் அமீர்கான் நடிப்பில் கஜினி படத்தை ரீமேக் செய்து வெளியிட்டனர். சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் கஜினி முக்கிய படமாக அமைந்தது. கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவும் கஜினி 2-ல் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.