திருமணமாகபோவதாக பரவிய வதந்தி - விளக்கமளித்த நிவேதா தாமஸ்
|ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிவேதா தாமஸ் வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா தாமஸ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'பாபநாசம்' மற்றும் ரஜினியுடன் 'தர்பார்' படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது இணையத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது. அதில் அவர், 'அதிக நாளாகிவிட்டது.. ஆனால்.. இறுதியாக..' என்று இதய எமோஜுடன் பதிவிட்டிருந்தார். இதனைப்பார்த்த ரசிகர்களில் சிலர் புதிய படம் குறித்த அறிவிப்பா? என்றும் சிலர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்றும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிவேதா தாமஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும்போது, "நான் நடிக்கும் படம் சம்பந்தமாக ஒரு பதிவை வலைத்தளத்தில் வெளியிட்டேன். அதை பார்த்து நிறைய பேர் எனக்கு திருமணம் ஆகப்போகிறது என்று பேசினர். நான் நடித்துள்ள படத்தில்தான் எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறார்கள். படத்தில் தாயாக நடித்து இருக்கிறேன்'' என்றார்.