ரூ.2 கோடி வேலைக்கு ரூ.200 கோடி வாங்குகிறார்... அமீர்கானை சாடிய கங்கனா ரணாவத்
|ரூ.2 கோடி வேலைக்கு ரூ.200 கோடி வாங்குகிறார் என அமீர்கானை கங்கனா ரணாவத் சாடியுள்ளார்.
தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தநிலையில் அமீர்கானை தற்போது கடுமையாக விளாசி உள்ளார். அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால்சிங் சத்தா படம் படுதோல்வி அடைந்தது.
இந்த படம் திரைக்கு வர தயாரானபோது அமீர்கான் இந்தியாவில் சகிப்பு தன்மை இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்று தனது மனைவி கூறியதாக பேசிய வீடியோவை பலரும் வலைத்தளத்தில் பகிர்ந்து லால்சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்தனர். லால்சிங் சத்தா தோல்விக்கு இந்த புறக்கணிப்புதான் காரணமா என்ற கேள்விக்கு பதில் அளித்து கங்கனா ரணாவத் கூறும்போது. ''லால்சிங் சத்தா படம் தோல்விக்கு இந்தியாவுக்கு எதிரான அமீர்கானின் பேச்சுதான் காரணம். ரூ.2 கோடி வேலைக்கு இணையான நடிப்பை கொடுத்து விட்டு ரூ.200 கோடி வாங்கிக் கொள்கிறார்.
சூப்பர் ஸ்டாருக்குள்ள எல்லா சலுகைகளையும் பெறுகிறார். தனி விமானத்தில் பயணிக்கிறார். உலகத்தின் முன்னால் நமது நாட்டை சகிப்புத்தன்மையற்றது என்று சொல்லி களங்கப்படுத்தினார். படங்கள் தோல்வி அடைந்தாலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்காமல் இருப்பது நியாயம் இல்லை'' என்றார்.