< Back
சினிமா செய்திகள்
மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார் கவுதம் கார்த்திக்..!
சினிமா செய்திகள்

மஞ்சிமா மோகனை கரம் பிடித்தார் கவுதம் கார்த்திக்..!

தினத்தந்தி
|
28 Nov 2022 6:17 PM IST

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை,

குழந்தை நட்சத்திரமாக வந்து கதாநாயகியாக வளர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். 'கலியுஞ்சல்' படத்தில் ஆரம்பித்து பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் விபின் மோகன் மற்றும் நடனக் கலைஞர் கலமண்டலம் கிரிஜா ஆகியோரின் மகளாவார். மஞ்சிமா மோகன் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக தகவல் வெளியானது. பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவுதம் தற்போது முருகதாஸ் தயாரிப்பில் 'ஆகஸ்ட் 16,1947' படத்தில் நடித்துள்ளார். சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்திலும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் நவம்பர் 28-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இதைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது கவுதம் கார்த்திக் வருகிற நவம்பர் 28-ம் தேதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும்படியாக நடக்கிறது. திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை என்று கூறினார்.

இந்த நிலையில், கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர். மேலும் இருவருக்கும் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்