இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் 'காந்தாரா'
|கன்னட மொழியில் தயாரான 'காந்தாரா' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இந்த படத்தின் வசூல் முந்தைய பல வெற்றி படங்களின் வசூலை முறியடித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.
காந்தாரா படத்தை ரூ.16 கோடி செலவில் எடுத்து இருந்தனர். ஆனால் இந்த படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். அவரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில் காந்தாரா படத்தை வெளிநாடுகளிலும் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரிஷப் ஷெட்டி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "காந்தாரா படத்துக்கு வெளிநாட்டு ரசிகர்களிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் காந்தாரா படத்தை டப்பிங் செய்து வெளியிட இருக்கிறோம். இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று கூறியுள்ளார்.