கணேஷ் வெங்கட்ராமனுடன் நடிக்கிறார்... மீண்டும் தமிழ் படத்தில் பாவனா
|நடிகை பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் புதிய தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தில் அறிமுகமான பாவனா 'வெயில்', 'தீபாவளி', 'கூடல் நகர்', 'ஆர்யா', 'ராமேஸ்வரம்', 'வாழ்த்துகள்', 'ஜெயம் கொண்டான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அஜித்குமாரின் 'அசல்' படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் 2010-ல் வெளியானது.
அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. ஆனாலும் தெலுங்கு, மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் புதிய தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் நாயகனாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். ஜெய்தேவ் டைரக்டு செய்கிறார். கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
'பேய் திரில்லர்' கதையம்சத்தில் உருவாகிறது. கொடைக்கானலில் பாவனா, கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கணேஷ் வெங்கட்ராமன் கூறும்போது, "திறமையான பாவனா 'அசல்' படத்துக்கு பிறகு தற்போது தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம்.
இந்த படம் 'ஹாரார் திரில்லர்' கதையம்சத்தில் தயாராகிறது. விஜய்யின் 'வாரிசு' படத்தில் முதல் தடவையாக நான் நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன" என்றார்.