பாலியல் வழக்கு: 'ஊ சொல்றியா மாமா' நடன இயக்குனருக்கு ஜாமீன்
|நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
பிரபல சினிமா நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ரவுத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து இருந்தார். இந்த பாடல் வரவேற்பை பெற்றது.
35 வயது நடன பெண் 2020-ம் ஆண்டு கணேஷ் ஆச்சார்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார். கணேஷ் ஆச்சார்யா மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இதனால் கணேஷ் ஆச்சார்யா கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு கணேஷ் ஆச்சார்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.