சூதாட்ட செயலி மோசடி; மேலும் 3 நடிகைகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்
|சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகிய 3 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொல்கத்தா, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையின்போது ரூ.417 கோடி மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்த இந்தி நடிகர் ரன்பீர் கபூர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரன்பீர் கபூர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதுபோல் சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகிய 3 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா மோசடியில் பண பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட செயலி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, சூதாட்ட செயலியை விளம்பரம் செய்வதற்காக பெற்ற பணம் குறித்த விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் நடிகைகள் சமர்ப்பிக்க வெண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரன்பீர் கபூர் தரப்பில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக 2 வார அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.