அவதூறு பதிவுகளால் விரக்தி... சமூக வலைத்தளத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்
|அவதூறு பதிவுகளால் விரக்தியில் சமூக வலைத்தளத்தில் இருந்து பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் விலகினார்.
தமிழில் தனுசுடன் ஜெகமே தந்திரம், பபூன் ஆகிய படங்களில் நடித்துள்ள ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கிறார். ஜோசப் என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
சமீபத்தில் கேரள மாநிலம் லாகமணியில் உள்ள எஸ்டேட் பகுதியில் விவசாயம் செய்ய அனுமதித்த இடத்தில் சட்டவிரோதமாக வேகமாக ஜீப் ஓட்டி பந்தயத்தில் ஈடுபட்டதாக ஜோஜு ஜார்ஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக ஜோஜு ஜார்ஜ் அறிவித்து உள்ளார். அவர் கூறும்போது, "சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. எனவே சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுகிறேன். வாழ்க்கையில் போராட்டத்தை சந்தித்து வருகிறேன். நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று சொல்லவில்லை. தீங்கு செய்யாமல் இருந்தால் மகிழ்வேன்'' என கூறியுள்ளார்.