< Back
சினிமா செய்திகள்
விஜயகாந்த் உடனான நட்பை எப்போதும் மறக்க முடியாது - சரத்குமார்
சினிமா செய்திகள்

'விஜயகாந்த் உடனான நட்பை எப்போதும் மறக்க முடியாது' - சரத்குமார்

தினத்தந்தி
|
28 Dec 2023 8:53 PM IST

விஜயகாந்த் தனக்கு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகொடுத்தார் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-

"எனக்கு இது ஒரு துக்கமான நாள். விஜயகாந்த் மருத்துவமனைக்குச் செல்லும்போதெல்லாம் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுபவர்களில் நானும் ஒருவன். என்னுடைய கலையுலக பயணத்தில் மிகப்பெரிய சரிவை நான் பார்க்கும்போது எனக்கு ஆதரவு கொடுத்தவர் விஜயகாந்த்.

'புலன் விசாரணை' படத்துக்காக மேக்அப் மேன் ராஜூ என்னை விஜயகாந்திடம் அழைத்துச் சென்றார். மிகப்பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார், என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார். அன்று தொடங்கியது எங்கள் நட்பு.

இந்த நாளில் நான் சென்னையில் இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தம். விஜயகாந்த் எனக்கு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகொடுத்தார். அவர் தயாரித்த 'தாய்மொழி' என்கிற படத்தில் என்னை நடிக்க வைத்து அவர் கவுர வேடத்தில் நடித்தார்.

அவருடனான நட்பை எப்போதும் மறக்க முடியாது. நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பொதுச்செயலாளரான எனக்கு மரியாதை கொடுத்து நடத்தினார். அதை என்றும் மறக்க முடியாது. நடிகர் சங்கத்துக்காக கலைநிகழ்ச்சிகளை அவ்வளவு நேர்த்தியாக நடத்திக் காட்டினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் என இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்