இன்ஸ்டாகிராமில் வித்யாபாலன் பெயரில் மோசடி
|இதற்கு முன் வித்யாபாலன் பெயரில் வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டனர்
மும்பை,
இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான த டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தமிழில் அஜித்குமார் ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார்.
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் அவ்வப்போது போலி கணக்கு தொடங்கப்படுவதும், பின்னர் அது சர்ச்சையாகி வருவதும் நடந்துள்ளது. பலர் சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரை வைத்து மோசடியில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்தவகையில் பாலிவுட் நடிகை வித்யாபாலன், இதுபோன்ற பிரச்சினையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வித்யாபாலன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடி நடந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, "எனது பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அந்த கணக்கில் இருந்து ஏதேனும் குறுந்தகவல் வந்தால் யாரும் கண்டுகொள்ள வேண்டாம். சிலர் எனது பெயரில் போலி கணக்கு வைத்து, மற்றவர்களை ஏமாற்றி பணம் மற்றும் இதர உதவிகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்'' என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் இதைப்போலவே வித்யாபாலன் பெயரில் வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.