தயாரிப்பாளரிடம் நடிகை அனுஷ்கா பெயரில் மோசடி
|அனுஷ்காவை வைத்து படம் எடுக்க கால்ஷீட் வாங்கி தருவதாக தயாரிப்பாளரிடம் மோசடி நடந்துள்ளது.
தமிழில் வேட்டைக்காரன், வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், இரண்டாம் உலகம், சிங்கம், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில் அனுஷ்கா பெயரில் மோசடி நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அனுஷ்காவை வைத்து படம் எடுக்க கால்ஷீட் வாங்கி தருவதாக தயாரிப்பாளர் லட்சுமன் சாரி என்பவரிடம் சினிமா மானேஜர் எல்லா ரெட்டி என்பவர் ரூ.51 லட்சம் வாங்கி உள்ளார். அனுஷ்காவை சந்திக்க வைப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதற்காக தயாரிப்பாளரை பல முறை பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அனுஷ்காவை சந்திக்க முடியவில்லை. இதுபோல் இசையமைப்பாளர் மணிஷர்மாவிடம் கால்ஷீட் வாங்கி தருவதாகவும் ரூ.25 லட்சம் வாங்கி உள்ளார். அவரையும் சந்திக்க வைப்பதாக சொல்லி ஏமாற்றி உள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும் பணத்தை தயாரிப்பாளர் திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் எல்லா ரெட்டி மிரட்டி உள்ளார். அனுஷ்கா பெயரில் நடந்த மோசடி குறித்து தயாரிப்பாளர் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.