படப்பிடிப்பில் அடிப்பாரா? இயக்குநர் பாலா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வணங்கான் பட நடிகை
|நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு இயக்குநர் பாலா உதவி செய்தார் என்று நடிகை மமிதா பைஜு கூறியுள்ளார்.
சென்னை,
இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக சூர்யா திடீரென விலகினார்.
இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது. வணங்கான் படம் தொடர்பாக வெளிவரும் அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிறச் செய்துள்ளது.
இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜு, "வணங்கான் படப்பிடிப்பில் பாலா தன்னை தோள் பட்டையில் அடித்தார் என தெரிவித்தார். இதனையடுத்து,மமிதாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பேச தொடங்கினர். கடந்த இரு தினங்களாக இது பற்றி பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மமிதா பைஜு பேசிய காணொளி வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவு தொடங்கியது. இந்த நிலையில், இயக்குனர் பாலா தன்னை அடிக்கவில்லை என மமிதா பைஜு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, 'படப்பிடிப்பில் பாலா சார் மிக கவனமாக இருப்பார் என்பதைதான் நான் கூறினேன். அதில் இருந்து ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு தவறான தகவலை பரப்பியுள்ளார்கள்.
படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் வேலை பார்த்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் உதவி செய்தார். அந்தப் படத்தில் நான் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துஷ்பிரயோகமான நடத்தையையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். வணங்கானில் இருந்து விலக நான் மலையாளப்படத்தில் கமிட் ஆனதே காரணம், அதுபோல் நடிகர் சூர்யா சார் விலகுவதற்கு காரணம் கதை பிடிக்காமல் போய் இருக்கலாம்' என இவ்வாறு கூறியுள்ளார்.