< Back
சினிமா செய்திகள்
காதலிக்காக...!! ஜவான் பட இலவச டிக்கெட் கேட்ட ரசிகர்; ஷாருக் கானின் நச் பதில்
சினிமா செய்திகள்

காதலிக்காக...!! ஜவான் பட இலவச டிக்கெட் கேட்ட ரசிகர்; ஷாருக் கானின் நச் பதில்

தினத்தந்தி
|
4 Sept 2023 11:53 AM IST

நடிகர் ஷாருக் கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் ஜவான் படம் வருகிற 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

புனே,

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்த பதான் படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு கூடுதலாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்விக்க ஜவான் படம் தயாராகி வருகிறது. பான் இந்தியாவாக படம் உருவாகி ஒரு சில நாட்களில் திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது.

இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பல்வேறு வேடங்களை ஏற்றுள்ளனர். நயன்தாரா நாயகியாக நடிக்கும் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லன் வேடம் ஏற்றுள்ளார். தவிரவும், யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். பாலிவுட்டில் அவருக்கு இது அறிமுக படம்.

படம் பற்றிய புதிய போஸ்டர்களை தனது இன்ஸ்டாவில் நடிகர் ஷாருக் கான் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இது வெளியான சில மணிநேரங்களில் அவருடைய புகழ் பெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை எக்சில் (முன்பு டுவிட்டர்) நடத்தினார்.

அதில், ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் நகைச்சுவையாகவும், ரசிகர்கள் வருத்தம் அடையாத வகையிலும், கூலான பதில்களை அளிக்க கூடியவர் அவர்.

இதில் ஒரு ரசிகர், ஷாருக் கானிடம், என்னுடைய காதலிக்காக, ஜவான் படத்தின் இலவச டிக்கெட் ஒன்றை எனக்கு நீங்கள் வழங்க முடியுமா? என கேட்டு, நான் ஒரு வீணாப்போன காதலன் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு ஷாருக் கான் அளித்த பதில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. அவர் அளித்த பதிலில், நான் அன்பை மட்டுமே இலவச அடிப்படையில் வழங்குபவன். காதல் என வரும்போது, அதில் மலிவான நபராக நடந்து கொள்ளாதீர்கள். போய் டிக்கெட் வாங்குங்கள். பின்னர், உங்களுடன் காதலியையும் அழைத்து செல்லுங்கள் என பதிலளித்து உள்ளார்.

மேலும் செய்திகள்