பண பிரச்சனையால் விரிசல்.. முடிவுக்கு வந்த மோதல்: மீண்டும் ஒன்று சேர்ந்த சூரி - விஷ்ணு விஷால்
|நடிகர்கள் சூரி - விஷ்ணு விஷாலின் நீண்டகால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை,
நடிகர் சூரியும், விஷ்ணு விஷாலும் திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பண பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டது.
அதாவது, விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் நிலம் ஒன்றை வாங்கித்தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக சூரி நீதிமன்றம் வரை சென்றார். ஆனால், சூரியை தனது அப்பா ஏமாற்றவில்லை என்றும், அவர் தங்களுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றது வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார். விஷ்ணு விஷால் இடையே நடந்த மோதல், சமூக வலைதளங்கள் மட்டுமன்ற கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக விஷ்ணு விஷால் கூறியபோது, "சூரியை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இருவரும் சில விஷயங்களை பேசிக்கொண்டோம். தற்போது இருவரும் மனதளவில் ஒரு புரிதலுக்கு வந்துவிட்டோம். எங்கள் இருவருக்கும் இடையே 3வது நபர் வந்து விளையாடிவிட்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சூரி எந்த அளவு பாதிக்கப்பட்டாரோ அதே அளவு எனது அப்பாவும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இருவரும் பேசி பிரச்சனையை முடித்துவிட்டோம்." என்றார்.
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தனது தந்தை மற்றும் சூரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "காலம் எல்லாவற்றுக்கும் எல்லோருக்குமான பதில்" என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு "நடப்பவை எல்லாம் நன்மைக்கே, நன்றிங்க விஷ்ணுவிஷால்" என சூரியும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் நடிகர்கள் சூரி - விஷ்ணு விஷாலின் நீண்டகால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.