பொங்கலன்று பர்ஸ்ட் லுக்... பிரபாஸின் 24வது படத்தின் அறிவிப்பு வெளியானது...!
|மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் சலார் திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.
சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'சலார்' திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படம் மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் பிரபாஸின் 24வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு பொங்கலன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்க உள்ளார்.