வன்முறையை தூண்டும் படங்கள் எடுக்க கூடாது - டைரக்டர் பேரரசு
|சலங்கை துரை 'கடத்தல்' என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் எம்.ஆர்.தாமோதர், விதிஷா, ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த பட விழா நிகழ்ச்சியில் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ள பேரரசு கலந்து கொண்டு பேசும்போது, "10 வருடம் கழித்துப் படத்தின் டைட்டிலை சொன்னால் நடித்த நடிகர்கள், படத்தின் கதை, சீன் எல்லாவற்றையும் மக்கள் சொல்வார்கள். அதுதான் உண்மையான வெற்றி. செல்வாக்கினால் பெறும் வெற்றி நிலைக்காது.
சினிமாவில் என்ன பிரச்சினைகளை வேண்டுமானாலும் சொல்லலாம். அது மக்களை ஈர்க்க வேண்டும். மக்களுக்கு வலி ஏற்படுத்தும் படங்களையோ, வன்முறையை தூண்டும் படங்களையோ எடுக்க கூடாது.
சினிமாவில் சாதிகள் இல்லை. ஜெயித்தவன், ஜெயிக்கப் போகிறவன் என்ற இரண்டு சாதிகள் மட்டுமே உண்டு. ஜெயித்தவர்கள் காலில் எல்லோரும் விழுவார்கள். என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்ட எனது குருநாதர் ராமநாராயணன் சாதி கேட்கவில்லை. எனக்கு பட வாய்ப்பு கொடுத்த விஜய் உள்ளிட்ட யாருமே அப்படி கேட்டது இல்லை. ஒரு சமூகத்தினரை குறை சொல்வது போன்று படங்கள் எடுக்க கூடாது. சினிமாவில் இனபேதத்தை கலக்க கூடாது'' என்றார்.