மீண்டும் ரிலீசாகும் முன்னணி நடிகர்களின் படங்கள்
|மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகிறது.
சினிமாவில் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுவது தற்போது டிரெண்டாகி வருகிறது.
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்த 'பாபா' படம் டிஜிட்டல் முறையில் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த 'வேட்டையாடு விளையாடு' படமும் ரீ-ரிலீஸ் ஆனது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைத்தது.
சில நாட்களுக்கு முன்பு 'சுப்ரமணியபுரம்' படமும் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வரிசையில் மேலும் சில தமிழ் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி அஜித்குமாரின் சூப்பர்ஹிட் படங்களான 'அமர்க்களம்', 'தீனா' போன்ற படங்கள் மீண்டும் திரைக்கு வரவுள்ளன.
சூர்யாவின் திரை பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய 'காக்க... காக்க...', மாதவன் நடித்த 'மின்னலே', கார்த்தி அறிமுகமாகிய 'பருத்திவீரன்' போன்ற படங்களும் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
ஏற்கனவே எம்.ஜி.ஆர்.-சிவாஜிகணேசன் நடித்த சில படங்கள் அவ்வப்போது 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் திரைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் சினிமாவில் ஹிட் ஆன படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.