திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன்
|திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவருமானவர் ரவீந்தர் சந்திரசேகர்.
இவர் மீது சென்னையைச் சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ரவீந்தர் ரூ.200 கோடி மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாககூறி தன்னிடம் ரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் ரவீந்தரின் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன எனவும், ஆனால் இவை அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா? என தெரியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது. விசாரணை முடிவில் நீதிமன்றம், 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்துமாறு ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.