புதுமுகங்கள் நடிக்கும் படம்
|இயக்குனர் பண்டி சரோஜ் குமார் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
`போர்க்களம்' படத்தை இயக்கி பிரபலமானவர் பண்டி சரோஜ்குமார். தொடர்ந்து `மாங்கல்யம்' என்ற படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். தற்போது புதிய படத்தை டைரக்டு செய்து தயாரித்து கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்துக்கு `பராக்ரமம்' என்று பெயர் வைத்துள்ளனர். அனாமிகா, கிரிட்டி, மோகன் சேனாபதி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் பண்டி சரோஜ்குமார் கூறும்போது, ``மதுரையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த துரைராஜா என்கிற இளைஞனின் வாழ்க்கையில் உள்ளூர் கிரிக்கெட், காதல், நாடக வாழ்க்கை மற்றும் அரசியல் ஆகியவை எப்படிப்பட்ட பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது? என்பது தான் படத்தின் கதை.
இளைஞர்களை அனைத்து விதத்திலும் கவரும் படமாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என குடும்பத்தோடு திரையரங்கிற்கு வந்து பார்க்கக்கூடிய படமாகவும் உருவாகிறது. இந்த படத்தில் என்னுடன் பல புதுமுக நடிகர்- நடிகைகள் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது'' என்றார்.