சினிமா இயக்குனரின் புகார்: முகநூல், யூடியூப் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு
|முகநூல், யூடியூப் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொச்சி,
கேரளாவைச் சேர்ந்த சினிமா இயக்குனர் இ.உபாய்னி. இவர் இயக்கிய 'ரகேல் மகன் கோரா' படம் கடந்த 13-ந்தேதி வெளியானது.
அதைத்தொடர்ந்து முகநூல் (பேஸ்புக்), யூடியூப் உள்ளிட்ட தளங்களில் சிலர் இந்த படம் குறித்து எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இயக்குனர் உபாய்னி போலீசில் புகார் அளித்தார். அதில், 'எனது 'ரகேல் மகன் கோரா' படம் குறித்து சிலர் முகநூல், யூடியூப்பில் 'எதிர்மறை விமர்சன குண்டு' வீடியோக்களுடன், மோசமான கமெண்டுகளை வெளியிட்டுள்ளனர். இதனால் படம் பாதிக்கப்படுகிறது. படம் குறித்த தவறான விமர்சனங்களுக்கு முகநூல், யூடியூப் நிறுவனங்கள் இடம் அளித்துள்ளன.
மேலும் மற்றொரு சினிமா விளம்பர நிறுவனம், என்னை மிரட்டி பணம் பறிக்க முயல்கிறது. தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றால் மேலும் கெடுதலையே செய்வோம் என்று அந்நிறுவனம் அச்சுறுத்துகிறது' என அந்த புகாரில் கூறியுள்ளார்.
இயக்குனரின் புகாரை அடுத்து, சினிமா விளம்பர நிறுவன உரிமையாளர் மற்றும் முகநூல், யூடியூப் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.