நடிகர்களின் சம்பளத்தை குறைக்க பட அதிபர்கள் தயங்குகிறார்கள் - 'சுந்தரபாண்டியன்' பட டைரக்டர்
|நடிகர்களின் சம்பளத்தை குறைக்க பட அதிபர்கள் தயங்குகிறார்கள் என்று டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறினார்.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய 'சுந்தரபாண்டியன்' படத்துக்கு தமிழக அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருது கிடைத்து இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியதாவது:-
"சுந்தர பாண்டியன் படத்துக்கு கதை எழுதும்போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியே. பெரும்பாலான மக்கள் பேருந்தில் பயணிப்பதால், படத்தில் உள்ள பேருந்து பயண காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை எளிதாக கதைக்குள் இழுத்து சென்றது.தற்போது சசிகுமாரை வைத்து, "முந்தானை முடிச்சு" படத்தை "ரீமேக்" செய்து வருகிறேன். அதையடுத்து, ரெக்கை முளைத்தேன், கொலைகார கைரேகைகள் ஆகிய படங்களை இயக்க இருக்கிறேன்.தெலுங்கு சினிமா துறையில், நடிகர்-நடிகைகளின் உதவியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களே சம்பளம் தர வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. தமிழ் சினிமாவில் இதுபற்றி அனைத்து தயாரிப்பாளர்களின் மனதில் எண்ணம் இருந்தாலும், இந்த பேச்சை முதலில் யார் எடுப்பது என்ற தயக்கம் இருக்கிறது. நடிகர்களின் சம்பளத்தை குறைக்க பட அதிபர்கள் தயங்குகிறார்கள்."
இவ்வாறு டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறினார்.