தந்தையின் கலப்பு திருமணம்... வெளிப்படையாக பேசிய நடிகர் அமிதாப் பச்சன்
|நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய தந்தையின் கலப்பு திருமணம் பற்றி வெளிப்படையாக சில விசயங்களை பேசியுள்ளார்.
புனே,
இந்தி திரையுலகில் ரசிகர்களால் பிக் பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி 15 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
தொலைக்காட்சியில் வெளிவரும் வினாடி வினா வடிவிலான இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், கேள்விகளுக்கு சரியான பதிலை கூறும்போது, ஒவ்வொரு சரியான பதிலுக்கும் பரிசாக பணம் கிடைக்கும். அடுத்தடுத்து கூறும் சரியான பதில்களுக்கு பணம் இரட்டிப்படைந்து, இறுதியாக கேட்கப்படும் கேள்விக்கான சரியான பதிலுக்கு ரூ.1 கோடி பரிசு தொகை கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் சரோஜினி நாயுடு பற்றிய கேள்விக்கு சரியான பதில் கூறினார். இதன்பின்னர், நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய கடந்த கால நினைவுகளை பற்றி நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசும்போது, இதனை கூறுவதற்கு எனக்கு சிறிது தயக்கம் இருக்கிறது.
அவரும் (சரோஜினி நாயுடு) கூட என்னுடைய தந்தையின் ஒரு பெரிய ரசிகை. என்னுடைய தந்தை கலப்பு திருமணம் செய்து கொண்டவர்.
என்னுடைய தாயார் தேஜி (பச்சன்) சீக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர். நாங்கள் அலகாபாத்தில் வசித்தபோது, கலப்பு திருமணம் அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ளப்படுவதில்லை. அதனால், என்னுடைய தாயாரை, என்னுடைய தந்தை கலப்பு திருமணம் செய்தபோது, பலத்த எதிர்ப்பு இருந்தது என பச்சன் கூறியுள்ளார்.
அப்போது அவரை தேற்றிய முதல் நபர் சரோஜினி நாயுடு ஆவார். பண்டிட் ஜவகர்லால் நேருவிடம், எனது தந்தையை அவர் அறிமுகப்படுத்தினார். நேரு அப்போது அலகாபாத்தில் உள்ள ஆனந்த் பவனில் வசிப்பது வழக்கம்.
அவர் என்னுடைய தந்தையை அறிமுகம் செய்து வைத்தது, இன்றளவும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் (சரோஜினி நாயுடு), கவிஞர் மற்றும் அவருடைய கவிதைகளை பாருங்கள் என நேருவிடம் கூறினார்.
நடிகர் அமிதாப்பின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் மதுஷாலா மற்றும் அக்னீபாத் உள்ளிட்ட கவிதைகளை எழுதி பிரபலம் அடைந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. நடிகர் அமிதாப் தன்னுடைய பிளாக்கில், ஹரிவன்ஷ் ராய் பச்சன் எப்போதும், தனது மகன் (அமிதாப்) தன்னுடைய தந்தையின் வழிதோன்றலே என நம்புபவர்.
நான் என்னுடைய தாத்தாவின் வழிதோன்றலா? என எனக்கு தெரியாது. ஆனால், மூத்தவர்களின் ஆசிகள், அன்பு மற்றும் வேண்டுதல்கள் எப்போதும் என்னுடனேயே தொடர்ந்து இருக்கும். அவர்களுக்கு நான் நன்றி கடன்பட்டவனாகவே இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன் அடுத்து, கல்கி 2898 ஏ.டி. என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ், தீபிகா படுகோனே நடித்து வரும் இந்த படத்துடன், டைகர் ஷ்ராப் உடன் கணபாத் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.