'தந்தையே பிள்ளையை கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது' - 'லியோ' படத்தை விமர்சித்தாரா எஸ்.ஏ சந்திரசேகர்..?
|தற்போது உள்ள இயக்குனர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனமில்லை.
சென்னை,
இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான 'தேசிங்கு ராஜா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
முதல் பாகத்தில் நடித்த விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை இன்பினிட்டி கிரியேசன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வருகிற கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'தேசிங்கு ராஜா-2' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் தற்போது வெளியாகும் படங்களையும், அதன் இயக்குனர்களையும் சரமாரியாக விமர்சித்தார்.
விழாவில் பேசிய அவர், "சமீபத்தில் ஒரு படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே அதன் பர்ஸ்ட் காப்பியை பார்த்தேன். அந்த படத்தை பார்த்துவிட்டு அப்படத்தை இயக்கிய இயக்குனருக்கு போன் செய்தேன். அவரிடம் முதல் பாதி நன்றாக இருக்கிறது. ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை முதல் பாதியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இரண்டாம் பாதி சரியாக இல்லை. முதல் பாதி அளவிற்கு என்னை ஈர்க்கவில்லை.
தந்தையே பெற்ற பிள்ளையை கொல்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினேன். அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த அவர் உடனே, 'சார் நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்' என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார். அதன்பிறகு அவர் போன் செய்யவே இல்லை. மேலும் படம் வெளியான பிறகு நான் என்ன கருத்தை சொன்னேனோ அதைத்தான் ரசிகர்களும் விமர்சித்தனர்.
தற்போது உள்ள இயக்குனர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனமில்லை. திரைக்கதைக்கு எல்லாம் யாரும் மரியாதை கொடுப்பது இல்லை. ஹீரோ கிடைத்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணி விடலாம் என்று நினைக்கிறார்கள். ரசிகர்கள் ஹீரோவுக்காக எல்லாம் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கதை எல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. ஹீரோவுக்காகதான் படம் ஓடுகிறது. இதனால் அந்த இயக்குனர் பெரிய ஆள் என நினைத்துக் கொண்டு உள்ளார்' என்றார்.
அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எஸ்.ஏ சந்திரசேகர் லியோ படத்தைதான் விமர்சிக்கிறாரா..? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.