தொடக்கூடாத இடத்தில் கைவைத்த ரசிகர்: கடுப்பான காஜல் அகர்வால்
|காஜல் அகர்வால் பொதுவெளியில் கசப்பான அனுபவத்தை சந்தித்தார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்,
தமிழில் பழனி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் காஜல் அகர்வால். மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்ற படத்தில் நடித்தார்.
இந்தநிலையில் காஜல் அகர்வால், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற ஆடை அணிந்து வந்திருந்தார். அப்போது காஜலுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நிகழ்ச்சி முடிந்த பிறகா..? நிகழ்ச்சி தொடங்கும்போதா என்று தெரியவில்லை.
ரசிகர்கள் முன்னிலையில் காஜல் அகர்வால் வந்தார். அப்போது, அவரை சுற்றி இருந்த ரசிகர்கள் காஜலிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து, கூட்டத்தில் இருந்து வந்த ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுப்பதற்காக அருகில் வந்தார். அந்தச் சமயத்தில் காஜல் எதிர்பார்க்காதபோது அவரது இடையில் ரசிகர் கையை வைத்தார். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த காஜல் அகர்வால், அந்த ரசிகரை பார்த்து என்ன இதெல்லாம் என்று கையை அசைத்தபடி கேள்வி கேட்டார். பிறகு அந்த ரசிகரை அங்கிருந்த பாக்ஸர்கள் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.