பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை
|மலைகா அரோராவின் தந்தை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'உயிரே' படத்தில் இடம்பெறும் "தையா தையா" என்ற பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார். இவர் நடன நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகை மலைகா அரோராவின் தந்தையான அனில் அரோரா (65), இன்று காலை 9 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆதாரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த தற்கொலைக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பாலிவுட் நடிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மலைகா அரோராவின் தந்தை நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.