பிரபல நடிகர்-டைரக்டர் பிரதாப் போத்தன் திடீர் மரணம்
|பிரபல நடிகரும், டைரக்டருமான பிரதாப் போத்தன் திடீரென மரணமடைந்தார்.
பிரபல நடிகரும், டைரக்டருமான பிரதாப் போத்தன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை படுக்கையிலேயே பிரதாப் போத்தன் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 70. பிரதாப் போத்தன் 1978-ல் மலையாளத்தில் ஆரவம் படத்திலும், தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1979-ல் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமும் நடிகராக அறிமுகமானார்.
1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். கமல்ஹாசனின் வாழ்வே மாயம் படத்தில் ஸ்ரீதேவியை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்திலும், மூடுபனி படத்தில் சைக்கோ கொலையாளியாகவும் நடித்து இருந்தார். பிரதாப் போத்தன் பாடுவது போன்று மூடுபனியில் இடம்பெற்ற 'என் இனிய பொன் நிலாவே' பாடலும் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற 'கோடை கால காற்றே' பாடலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், கரையெல்லாம் செண்பகப்பூ, சொல்லாதே யாரும் கேட்டால், தில்லு முல்லு, நெஞ்சில் ஒரு முள், பனிமலர், அம்மா, சட்டம் சிரிக்கிறது, புதுமைப்பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, ஜல்லிக்கட்டு, பேசும்படம், பெண்மணி அவள் கண்மணி, என் ஜீவன் பாடுது, அமரன், தேடினேன் வந்தது, பிரியசகி, ராம், ஆயிரத்தில் ஒருவன். பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
படிக்காதவன் படத்தில் தனுஷ் தந்தையாக வந்தார். விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மீண்டும் ஒரு காதல் கதை, சத்யராஜ் நடித்த ஜீவா, மகுடம், கமல்ஹாசனின் வெற்றி விழா, பிரபு நடித்த மை டியர் மார்த்தாண்டன், நெப்போலியன் நடித்த சீவலப்பெரி பாண்டி மற்றும் ஆத்மா, லக்கிமேன், மலையாளத்தில் சிவாஜி கணேசன், மோகன்லால் நடித்த ஒரு யாத்ரா மொழி உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார்.
சிறந்த நடிகர், இயக்குனருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். பிரதாப் போத்தன் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு கேயா என்ற மகள் உள்ளார். பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் சத்யராஜ், பிருதிவிராஜ் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.