மத உணர்வை புண்படுத்தியதாக பிரபல நடிகர் கைது
|மத உணர்வை புண்படுத்தியதாக பிரபல பஞ்சாபி மொழி நடிகர் ராணா ஜங் பகதூரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல பஞ்சாபி மொழி நடிகர் ராணா ஜங் பகதூர். இவர் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது வால்மீகி பகவான் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். போலீசில் புகார் அளித்தனர். நடிகர் ராணா ஜங் பகதூரின் உருவப் பொம்மைகளையும் எரித்தனர். அவரை கைது செய்யாவிட்டால், 11-ந்தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு ஜலந்தர் நீதிமன்றத்தில் நடிகர் ராணா ஜங் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதையடுத்து ராணா ஜங் பகதூர் கைது செய்யப்பட்டார். பின்னர் வால்மீகி சமூகத்தினரிடம் அவர் மன்னிப்புக் கேட்டார். 'நான் அரசியல் கட்சிகளில் இல்லை. என்னால் யாரும் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.'' என்று கூறியுள்ளார். மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.