ரஜினிக்காக மனம் மாறிய 'மாமன்னன்' பட வில்லன்
|‘வேட்டையன்’ படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு நகைச்சுவை கலந்த ஜாலியான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் ஞானவேல்.
சென்னை,
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தில் நடிகர் பகத் பாசில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், அதில் அவர் வில்லனாக நடிக்கிறார் என நினைத்தவர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வந்தாலும் தமிழில் பெரிய ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார் பகத். 'மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு வில்லன், 'புஷ்பா2' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லன், 'விக்ரம்' படத்திலும் ஆரம்பத்தில் நெகட்டிவ் ஷேட் என நடித்து வந்தவர் 'இனி வில்லன் ரோல் போதும்' என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
குறிப்பாக, தமிழில் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என்றிருந்தவருக்கு ரஜினியின் 'வேட்டையன்' பட வாய்ப்பு வந்திருக்கிறது. வில்லன் கதாபாத்திரமோ என்று பயந்தவருக்கு ஆச்சரியமாக நகைச்சுவை கலந்த ஜாலியான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் ஞானவேல்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பகத், முதலில் தயக்கம் காட்டி, பின்பு ரஜினிகாந்த் படத்தில் இப்படியான கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என்று மனம் மாறி ஒத்துக் கொண்டிருக்கிறார். இந்த அப்டேடுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் இவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'ஆவேஷம்' படத்திலும் பகத்துக்கு இப்படியான ஒரு ஜாலியான ஹீரோ கதாபாத்திரம்தானாம்.