சினிமா வாழ்க்கையில் நல்லது, கெட்டதை எதிர்கொண்டேன் - நடிகை ரெஜினா அனுபவம்
|தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்து பிரபலமான ரெஜினா கசான்ட்ரா, தொடர்ந்து ‘மாநகரம்', `சரவணன் இருக்க பயமேன்', `சிலுக்குவார் பட்டி சிங்கம்', `மிஸ்டர் சந்திரமவுலி' என்று பல முக்கிய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக உயர்ந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...
கேள்வி:- பெண்ணுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் வருவதைப் பற்றி....
பதில்:- நடிகர்-நடிகைகளுக்கு ஓ.டி.டி. தளங்கள் ஒரு எக்ஸ்பிரிமெண்ட் மேடையாக மாறிவிட்டது. புதிய புதிய கதாபாத்திரங்கள் வருகின்றன. நிறைய கதைகள் பெண்களை சுற்றி ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த டிரெண்ட்டு பெரிய திரைக்கு பரவினால் மிகவும் நன்றாக இருக்கும்.
கேள்வி:- சினிமாத் துறையில் கூட ஆண், பெண் வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார்களே அது பற்றி..
பதில்:- ஆண்-பெண் வித்தியாசம் பார்ப்பது எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. சினிமாத் துறையில் நடிகர்களோடு ஒப்பிட்டால் நடிகை களாக எங்களின் சம்பளம் மிகவும் குறைவு. சம்பள விஷயத்தில் மட்டும்தான் வித்தியாசம் இருக்கிறது. சினிமா இண்டஸ்ட்ரி என்பது ஒரு கிளாமர் உலகம் என்பதால் இங்கு நடக்கும் விஷயங்களை அதிகமாக பேசுகிறார்கள்.
கார்ப்பரேட் உலகமாக இருந்தால் யாரும் வாயை திறக்க மாட்டார்கள். நான் சினிமாவிற்கு வந்த சமயத்தில் இருந்த நிலைமைகள் வேறு. இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. எனது 12 ஆண்டு சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை எதிர்கொண்டேன். சில நல்லவை. சில கெட்டவை கூட உள்ளன. அவ்வளவுதான் வித்தியாசம்.
கேள்வி:- ஓ.டி.டியை பற்றி?
பதில்:- நடிகர்-நடிகைகளுக்கு ஓ.டி.டி என்பது மிகச் சிறந்த மேடை. ஒரு வரப்பிரசாதம். ரசிகர்களுக்கு அறுசுவை உணவு. சினிமா தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் வருவாய். புதிய இயக்குனர்களுக்கு ஒரு வரம்.எப்படி பார்த்தாலும் இது அனைவருக்கும் மிகச் சிறந்த ஒரு வாய்ப்பு. சினிமா மூலம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டேன். தமிழ், தெலுங்கு வெப் தொடர்கள், நடிகையாக என்னை ஒரு படி மேலே ஏற்றி விட்டிருக்கிறது.
இவ்வாறு ரெஜினா கூறினார்.