உடற்பயிற்சியால் எனது வயதையே மாற்றுவேன் - வீடியோ வெளியிட்டு ஜோதிகா உறுதி
|உடற்பயிற்சியால் எனது வயதையே மாற்றுவேன் என நடிகை ஜோதிகா வீடியோ வெளியிட்டு உறுதியளித்துள்ளார்.
நடிகை ஜோதிகா திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் தனது ஆரோக்கியத்திலும், தோற்றத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார். ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்து எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார்.
தற்போது மம்முட்டி ஜோடியாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் உடற்பயிற்சியை மேலும் தீவிரமாக்கி உள்ளார். பிறந்த நாளில் அனைவரும் ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தநிலையில் அவர் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் 'வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இந்த பிறந்த நாளை எனக்கு பரிசளித்துக் கொள்கிறேன். வயது என்னை மாற்றுவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். உடற்பயிற்சி வழிமுறைகள் மூலம் எனது வயதை நானே மாற்றுவேன்' என்ற பதிவையும் அதில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜோதிகா இளம் நடிகைகளுக்கே சவால் விடுகிறார் என்றும் பெண்களுக்கு உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்றும் வலைத்தளத்தில் பாராட்டி வருகிறார்கள்.