'அவர் வந்த பிறகு என் வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது' - காதல் அனுபவங்களை பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்
|நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான 'அயலான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படத்திலும் நடித்து வருகிறார்.
இவரும் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் தனது சினிமா, காதல் அனுபவங்களை ரகுல் ப்ரீத் சிங் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''ஒவ்வொருவரும் வாழ்க்கை துணையை தேடிக் கொள்வது சகஜம்தான். ஆனால் சினிமா துறையில் இருப்பவர்களை மட்டும் விதவிதமாக கற்பனை செய்து வதந்திகள் பரப்புகிறார்கள். நான் பல ஆண்டுகள் தனிமையில் கழித்தேன். ஜாக்கி பக்னானி என் வாழ்க்கையில் வந்த பிறகு எல்லாம் மாறி விட்டது. அவரும் சினிமா துறையில் இருப்பதால் என்னை நன்றாக புரிந்து கொண்டார்.
நாங்கள் இருவரும் சினிமா, பிட்னஸ் இரண்டையும் விரும்புகிறவர்கள். ஒரு நாளைக்கு 12 மணிநேரம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறோம். ஒருமணி நேரம் மட்டுமே எங்களுக்கு ஒன்றாக கழிக்க நேரம் கிடைக்கிறது. அப்போது எங்கள் சொந்த விஷயங்களை பற்றி மட்டுமே பேசிக் கொள்வோம்.
பத்து வருடங்களுக்கு முன்பு இந்தி பட உலகில் அடியெடுத்து வைத்தேன். சினிமா பின்னணி இல்லாததால் ஆரம்பத்தில் எத்தகைய கதையை தேர்வு செய்ய வேண்டும்? என்பதை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பினேன். ஆனால் நான் நடித்த முதல் படமே வெற்றி பெற்றது. அதை பெரிய அதிர்ஷ்டமாக கருதினேன்.
சினிமா வாழ்க்கை எனக்கு மிகுந்த திருப்தியை கொடுத்துள்ளது. குடும்பத்தோடு பார்க்கும் கதையம்சம் கொண்ட படங்களிலேயே அதிகமாக நடித்து இருக்கிறேன். நடிகையாக படப்பிடிப்பில் இன்னும் அதிக நேரங்கள் உழைக்கவும் நான் தயங்கியது இல்லை. சம்பளத்தை பற்றி யோசித்ததும் இல்லை'' என்றார்.