< Back
சினிமா செய்திகள்
நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது-  நடிகை ஸ்ருதி
சினிமா செய்திகள்

நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது- நடிகை ஸ்ருதி

தினத்தந்தி
|
1 April 2024 9:21 PM IST

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. பா.ஜ.க 400 இடங்களில் வெற்றி பெறும் என்று நடிகை ஸ்ருதி கூறினார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ருதி. இவர் கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 180 படங்களில் நடித்துள்ளார். இவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான 'கல்கி' திரைப்படத்திற்கான சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார். அத்துடன் இப்படத்திற்காக பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றார்.

மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று கூறிய நடிகை ஸ்ருதி, பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இலவச திட்டங்களால் மட்டும் பெண்கள் தன்னிறைவு பெற முடியாது. பெண்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் இலவசத் திட்டங்களை அறிவித்தது. ஆனால், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது பா.ஜ.க தான். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முடியுமே தவிர, இலவச திட்டங்களை அளித்து அவர்களைத் தன்னம்பிக்கை கொள்ளச் செய்ய முடியாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு வெற்றிகரமான பெண்ணின் பின்னாலும் பா.ஜ.க திட்டம் உள்ளது. இந்த முறை காங்கிரஸ் கட்சி, பெண்களின் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் இலவச திட்டத்தை அறிவித்தது.

இலவசப் பணம் கொடுத்தால் மட்டும் ஒரு பெண் தன்னிறைவு அடைய முடியாது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தி அரசியலிலும் முன்னேற வேண்டும் என்று நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் மீண்டும் பிரதமராக்க வேண்டும். அதற்கு பெங்களூருவில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பி.சி. மோகனுக்கு வாக்களிப்பேன். என் மகளும் முதல்முறை வாக்காளர். அவரும் பி.சி.மோகனுக்கு வாக்களிக்கப் போகிறார். நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. பா.ஜ.க 400 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி என்றார்.

மேலும் செய்திகள்