< Back
சினிமா செய்திகள்
கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன் - இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு
சினிமா செய்திகள்

கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன் - இசையமைப்பாளர் இளையராஜா பேச்சு

தினத்தந்தி
|
4 Jan 2024 10:05 PM IST

ஒரு பாட்டுக்கு 6 மாசம், ஒரு வருசம் எடுக்குற இசையமைப்பாளர் எல்லாம் இருக்கிறார்கள் என்று இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கூறியதாவது:-

"எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது. நான் முதன் முதலில் ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்த படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுது... கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு இசையமைத்தேன். அதனால் முதல் படத்திலேயே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன். நான் சிவபக்தன்; ஆனால் இதற்கெல்லாம் எதிரி இல்லை.

அப்போதெல்லாம் மாதம் 30 நாட்களிலும் எனக்கு வேலை இருக்கும். அப்போது 7 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் 1 கால்ஷீட். இப்போது கால்ஷீட் எல்லாம் கிடையாது. இரவு பகலாக வேலை செய்கிறார்கள். ஒரு பாட்டுக்கு 6 மாசம், ஒரு வருசம் எடுக்குற இசையமைப்பாளர் எல்லாம் இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்வதற்காக இல்லை. அவர்களுக்கு வரவில்லை.

நான் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் இல்லை. இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னைப் பொறுத்த வரையில் கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக்கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. அதை சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன். சின்ன வயதில் அண்ணனுடன் கச்சேரி செல்கையில், நான் ஹார்மோனியம் வாசிப்பேன். ஜனங்கள் கைதட்டுவார்கள். அதை கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகி, கர்வமும் ஜாஸ்தியாகி கொண்டே சென்றது.

ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்கா, மியூசிக்கிற்கா, இல்லை நாம் வாசிக்கிற திறமைக்கா என மனசுக்குள் ஒரு கேள்வி. அப்புறம் டியூனுக்காகத்தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகுது. அதன் பிறகு என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிப்போய் விட்டது. நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று புரிந்து கொண்டேன். இந்த கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டுகளும் என்னை சிந்திக்க வைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்