< Back
சினிமா செய்திகள்
எஞ்சாய் எஞ்சாமி விவகாரம்; சந்தோஷ் நாராயணனின் குற்றச்சாட்டுக்கு மாஜ்ஜா நிறுவனம் மறுப்பு
சினிமா செய்திகள்

'எஞ்சாய் எஞ்சாமி' விவகாரம்; சந்தோஷ் நாராயணனின் குற்றச்சாட்டுக்கு மாஜ்ஜா நிறுவனம் மறுப்பு

தினத்தந்தி
|
8 March 2024 5:33 PM IST

‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் மூலம் ஒரு ரூபாய் கூட வருமானமாக கிடைக்கவில்லை என சந்தோஷ் நாராயணன் கூறியிருந்தார்.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு 'மாஜ்ஜா ஸ்டுடியோஸ்' என்ற யூ-டியூப் சேனலில் 'எஞ்சாய் எஞ்சாமி' என்ற தனியிசைப் பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை அறிவு எழுதியிருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ ஆகியோர் பாடிய இந்த பாடல், யூ-டியூபில் மட்டும் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், அண்மையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் எங்களுக்கு ஒரு ரூபாய் கூட வருமானமாக கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாஜ்ஜா நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு எங்களால் எதையும் கேட்க முடியவில்லை. இதில் உலக புகழ் பெற்ற கலைஞர்களும் இடம்பெற்றுள்ளார்கள்" என்று கூறியிருந்தார்.

முன்னதாக மஜ்ஜா ஸ்டூடியோ நிறுவனத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆலோசகராக செயல்பட்டார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரகுமான் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கின. இசைக்கலைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் உதவவில்லை என பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தோஷ் நாராயணன் அளித்த விளக்கத்தில், மாஜ்ஜா விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானும் போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளார் எனவும், ஏ.ஆர்.ரகுமான் எப்போதும் தங்களுக்கு உறுதுணையாக இருந்தார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் குற்றச்சாடுக்கு மாஜ்ஜா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தனியிசை பாடல்களை சர்வதேச மேடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே மாஜ்ஜா நிறுவனத்தின் நோக்கம். அந்த வகையில் 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது எங்களுக்கு பெருமையை தருகிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொடக்கத்தில் இருந்தே இந்த பாடலில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை கொண்டிருந்தனர். இதனால் பாடலின் வெற்றி சர்ச்சைக்குள்ளானது. இந்த பாடலில் இடம்பெற்ற கலைஞர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை.

தனியிசை கலைஞர்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற உறுதி கொண்டிருக்கிறோம். கலைஞர்களுக்கான வருமானத்தை நாங்கள் எப்போதும் விலக்கி வைத்ததில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த வழிமுறைகளில் விரைவில் பதிலளிப்போம்."

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்