எஞ்சாய் எஞ்சாமி சர்ச்சை; மஜ்ஜா விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானும் ஏமாற்றப்பட்டார் - சந்தோஷ் நாராயணன் விளக்கம்
|எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் ஒரு ரூபாய் கூட வருமானமாக கிடைக்கவில்லை என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு 'மஜ்ஜா ஸ்டுடியோஸ்' என்ற யூ-டியூப் சேனலில் 'எஞ்சாய் எஞ்சாமி' என்ற தனியிசைப் பாடல் வெளியானது. இந்த பாடலின் வரிகளை அறிவு எழுதியிருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ ஆகியோர் பாடிய இந்த பாடல், யூ-டியூபில் மட்டும் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், நேற்றைய தினம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் எங்களுக்கு ஒரு ரூபாய் கூட வருமானமாக கிடைக்கவில்லை. இது தொடர்பாக மஜ்ஜா நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு எங்களால் எதையும் கேட்க முடியவில்லை. இதில் உலக புகழ் பெற்ற கலைஞர்களும் இடம்பெற்றுள்ளார்கள்" என்று கூறியிருந்தார்.
முன்னதாக மஜ்ஜா ஸ்டூடியோ நிறுவனத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆலோசகராக செயல்பட்டார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரகுமான் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கின. இசைக்கலைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் உதவவில்லை என பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மஜ்ஜா விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானும் ஏமாற்றப்பட்டார் என சந்தோஷ் நாராயணன் தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஏ.ஆர்.ரகுமான் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். எங்களைப் போலவே அவரும் இந்த விஷயத்தில் போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளார். நான் உள்பட யாருமே இந்த பாடலுக்காக எந்தவொரு வருவாயையும் பெறவில்லை. ஆனால் மிரட்டும் வகையிலான மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் அறிவு ஆகியோருடன் இணைந்து, எதிர்வரும் காலத்தில் தனியிசை கலைஞர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.