எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்த தமிழ் நடிகர்
|தப்பாட்டம் திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் துரை சுதாகர்.
சென்னை,
உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலன் மஸ்க். சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான டிவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர்மாற்றம் செய்து, பரபரப்பைக் கூட்டியவர். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர். அவ்வப்போது, உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கிண்டல் செய்யும் வகையிலும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவுகளை செய்வதை வழக்கமாக கொண்டவர்.
அதுபோலத்தான் ஓபன் ஏஐ பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வரும் புகார்கள் தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்து வெளியான மீம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தப்பாட்டம் என்ற தமிழ் திரைப்படத்தின் காட்சி பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பதிவால் மகிழ்ச்சி அடைந்த தப்பாட்டம் படத்தின் நடிகரும் - தயாரிப்பாளருமான துரை.சுதாகர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றி" என்று கூறினார்.
நடிகர் துரை சுதாகர், களவாணி 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.