யானை தந்தம் வழக்கு: நடிகர் மோகன்லால் மனு தள்ளுபடி
|பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது யானை தந்தம் வைத்திருக்க தன்னிடம் முறையான சான்றிதழ் இருப்பதாகவும், தந்தத்திற்காக எந்த யானையையும் கொல்லவில்லை எனவும் நடிகர் மோகன்லால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.