< Back
சினிமா செய்திகள்
டீசர் சர்ச்சை: நடிகர் பவன் கல்யாண் படக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?
சினிமா செய்திகள்

டீசர் சர்ச்சை: நடிகர் பவன் கல்யாண் படக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்?

தினத்தந்தி
|
22 March 2024 10:25 AM GMT

அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் தனது கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்தும் போது முன்கூட்டியே அதற்கான அனுமதியைப் பெற வேண்டும் என்று ஆந்திரா தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ஹைதராபாத்,

பவன் கல்யாண் நடித்துள்ள 'உஸ்தாத் பகத் சிங்' படத்தின் டீசரில், அவரது கட்சி சின்னமான டீ கிளாஸ் காட்டப்பட்ட விவாகரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள படம் 'உஸ்தாத் பகத் சிங்'. ஸ்ரீலீலா நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் யூடியூபில் வெளியானது.

இந்த தேர்தலில், அரசியல் கட்சித் தலைவரான பவன் கல்யாண், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் இறங்கவுள்ளார்.


இந்த டீசரில் ஓரிடத்தில் 'டீ கிளாஸ்' ஒன்று குளோசப்பில் காட்டப்படுகிறது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் சின்னமான டீ கிளாஸை டீசரில் காட்டியது சர்ச்சையானது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தனது சின்னத்தை பவன் கல்யாண் வேண்டுமென்றே டீசரில் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார், "நான் டீசரை பார்க்கவில்லை. எனவே, நான் அதில் கருத்து கூற முடியாது. ஆனால் விளம்பரத்திற்காக டீ கிளாஸை உயர்த்தி காட்டினால் அது அரசியல் விளம்பரமாகவே கருதப்படும். இப்படி அரசியல் விளம்பரங்கள் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் தனது கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்தும் போது முன்கூட்டியே அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். 'உஸ்தாத் பகத் சிங்' படத்தின் டீசர் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்