விஜய்யுடன் மோதும் துல்கர் சல்மான் - 'லக்கி பாஸ்கர்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
|'லக்கி பாஸ்கர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது.
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் நடிப்பில் வௌியான 'சீதா ராமம்' திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த 'கிங் ஆப் கோதா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 'லக்கி பாஸ்கர்'.
வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கும் இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' படமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இவ்வாறு விஜய் மற்றும் துல்கர் சல்மானின் படங்கள் மோத உள்ளதால் இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.