போதைப்பொருள் வழக்கு: நடிகர் நவ்தீப்புக்கு அமலாக்கத்துறை நோட்டீசு
|போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் நவ்தீப்புக்கு, அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீசு அனுப்பியுள்ளது.
தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு போலீசார் சமீபத்தில் ஐதராபாத்தில் போதை பொருள் பரிமாறப்பட்ட ஒரு விருந்து நிகழ்ச்சியை சுற்றி வளைத்தனர்.
அங்கு போதை பொருள் பயன்படுத்திய ஒரு நைஜீரிய இளைஞர், சினிமா டைரக்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். போதை பொருட்கள் சப்ளை செய்த ராம்சந்தர் என்பவரும் கைதானார்.
ராம்சந்தருடன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்தனர். இதையடுத்து நவ்தீப்புக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். செல்போனில் இருந்த சில தகவல்களை நவ்தீப் அழித்து இருந்ததால் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அழித்த தகவல்களை மீட்டு எடுத்த பிறகு மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் நவ்தீப்புக்கு, அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீசு அனுப்பியுள்ளது. அதில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.