போதைப்பொருள் வழக்கு: நடிகர் நவ்தீப்பிடம் 10 மணி நேரம் விசாரணை...!
|காலை 11 மணியில் இருந்து இரவு வரை 10 மணிவரை நடிகர் நவ்தீப்பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
சென்னை,
தமிழில் அறிந்தும் அறியாமலும், நெஞ்சில், ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், சீறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நவ்தீப், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில் தெலுங்கானாவில் போதைப் பொருள் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் நவ்தீப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து நவ்தீப்புக்கு சம்மன் அனுப்பி விசாரித்தனர். அவரது செல்போனில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டு இருந்ததால் அவற்றை மீட்டு எடுத்த பிறகு அழைப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நவ்தீப்புக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பினர். அதை ஏற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நவ்தீப் ஆஜரானார். நவ்தீப் தனது வங்கி கணக்கில் இருந்து போதைப் பொருள் சப்ளை செய்தவர்களுக்கு பணம் அனுப்பியதை கண்டுபிடித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
சினிமா துறையில் யாரெல்லாம் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் கேட்டனர். காலை 11 மணியில் இருந்து இரவு வரை 10 மணிவரை நவ்தீப்பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல கேள்விகளுக்கு நவ்தீப் பதில் சொல்லாமல் மவுனமாகவே இருந்தார். மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தனர்.