திரிஷ்யம் 3-ம் பாகம் படம் உறுதியானது
|’த்ரிஷ்யம் 3’ படத்தின் பணிகள் தொடங்குவதை தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் மலையாள படம் வெற்றிகரமாக ஓடி இந்தியா முழுவதும் உள்ள திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது. ரூ.5 கோடி செலவில் தயாரான திரிஷ்யம் படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. திரிஷ்யம் படத்தை கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டனர். தெலுங்கு, கன்னடம், இந்தி. சீன மொழிகளிலும் ரீமேக் ஆனது.
பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிக்க தயாராகி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்களும் 3-ம் பாகத்தை எடுக்கும்படி படக்குழுவினரை வற்புறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் 3-ம் பாகத்தை எடுப்பதற்கான பணிகளை தொடங்கி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது உறுதிப்படுத்தினார். இதையடுத்து மோகன்லால் ரசிகர்கள் வலைதளத்தில் 'திரிஷ்யம் 3' ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.